இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். குமரியில் துவங்கி காஷ்மீரில் முடியும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கும் ராகுல் காந்தி நேற்று இரவு சென்னை வந்தார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின் ராஜிவ் காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்துடன் கலந்துரையாட இருக்கிறார். இதன் பின் திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஒற்றுமை பயணம் தொடங்கும் இடமான கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இன்று மாலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் தேசிய கொடி வழங்கி நடைப்பயணத்தை துவக்கி வைக்க, முதற்கட்டமாக காந்தி மண்டபத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் பகுதிக்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த நடைபயணத்தில் தினமும் 20 முதல் 25 கிமீ நடந்து பயணத்தின் இறுதி நாள் வரை சுமார் 1 கோடி மக்களை ராகுல் காந்தி சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.