Skip to main content

‘15 நாளில் 10 சம்பவம்’ - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின் 15 நாளில் நிகழ்ந்த 10 சம்பவங்களைப் பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வுகளில் ஊழல், 5. முதுகலை நீட் தேர்வு ரத்து, 6. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு விலை உயர்வு, 8. காட்டு தீ விபத்து, 9. தண்ணீர் பற்றாக்குறை, 10. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள்” எனப் பட்டியலிட்டுள்ளார். 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

மேலும், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வலுவான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி தனது அழுத்தத்தைத் தரும். தனது பொறுப்பில் இருந்து பிரதமரை தப்பிக்க விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மூன்றாவது முறையாக நிறைவேறிய சட்ட மசோதா; மோடிக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Bill passed for the third time; CM again letter to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.