ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் ஆந்திர சட்டப்பேரவையிலுள்ள 175 இடங்களில் 151 இடங்களைக் கைப்பற்றியது. மேலும் சட்டப்பேரவை தேர்தலோடு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும், மொத்தமுள்ள 25 நாடாளுமன்ற இடங்களில் 22 இடங்களைக் கைப்பற்றி சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள 75 நகராட்சிகளுக்கும், 12 மாநகராட்சிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (14.03.2021) நடைபெற்றது. ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவால், எலுரு மாநகராட்சியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.
இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வாக்கு எண்ணப்பட்ட 11 மாநகராட்சிகளையும், மொத்தமுள்ள 75 நகராட்சிகளில் 72 நகராட்சிகளையும் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி, ஆந்திராவில் ஜெகன் மோகனின் செல்வாக்கு சரியவில்லை என்பதனைக் காட்டுவதாக அமைந்துள்ளது.