மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது. இந்தநிலையில், இந்தக் கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ்-இல் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்கம் தற்போது கையிலெடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்ய ஏற்கனவே இருக்கும் சட்டங்களைத் திருத்த வேண்டும் அல்லது புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என பாரதிய கிசான் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பாரதிய கிசான் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பத்ரி நாராயண் சவுத்ரி, "எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு இம்மாத இறுதிவரை அவகாசம் அளித்துள்ளோம். ஒருவேளை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், செப்டம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் தர்ணாவில் ஈடுபடுவோம்" என தெரிவித்துள்ளார்.