புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இதையொட்டி நெல் உள்ளிட்ட விளைபொருள் மூட்டைகளை வைப்பதற்காக இரண்டு கிடங்குகள் உள்ளன. இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடோனுக்கு இடது புறம் உள்ள பகுதியில் நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த சடலத்தை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் உடனடியாக கோரிமேடு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது உடம்பில் ஆங்காங்கே இரத்தக்கறை தழும்புகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கோரிமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட சில ரவுடிகளையும், பொதுமக்கள் சிலரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இறந்து கிடந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரின் மகன் திப்புசுல்தான்(29) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில் சிலருடன் அவருக்கு பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததும், சுமார் 40 லட்சம் வரை பலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் கடன்காரர்கள் அவரை அவ்வப்போது அழைத்து சென்று பணத்தை கேட்டு மிரட்டி தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது. இதன் எதிரொலியாக அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று அடித்து கொலை செய்து பிணத்தை புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்றும், மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரை விட்டு தற்போது தனியாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்றும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.