இந்தியாவில் கரோனா பரவல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என கூறிவருகிறார்.
தற்போது கூட, தனது மனைவிக்கு மருத்துவமனையில் போதுமான தண்ணீர், உணவு வழங்கப்படவில்லை என்றும், தனது மனைவி மூன்று மணிநேரம் தரையில் படுக்க வைத்ததாகவும் அம்மாநிலத்தின் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ பேசிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
இந்தநிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கரோனவை விரட்ட தனது வீட்டில் ஒருமணிநேரம் சிறப்பு பூஜையை நடத்தியுள்ளார். வேதமந்திரங்கள் முழங்க சிவனுக்கு நடத்தப்பட்ட இந்த ருத்ராபிஷேகத்தில், சிவனுக்கு 11 லிட்டர் பால் கொண்டு, பாலாபிஷேகமும் செய்யப்பட்டது.
இந்த பூஜைக்கு பிறகு அருகிலிருந்த கோசாலைக்கு (பசுக்கள் இருக்குமிடம்) சென்ற யோகி ஆதித்யநாத், அங்கிருந்த பசுக்களை வணங்கி, அவற்றுக்கு உணவளித்து மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.