
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
மகா கும்பமேளாவில் ஜனவரி 29ஆம் தேதியன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், மகா கும்பமேளாவிற்கு வருவதாக சாலை விபத்துகள், டெல்லி ரயில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்களையும் பக்தர்கள் சந்தித்தனர். பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த மகா கும்பமேளாவில் நடந்தாலும், சில துயர சம்பவங்களும் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சட்டப்பேரவையில் தற்போது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜின் படகு ஓட்டுநர்கள் சுரண்டப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தனர். இதற்கு பதிலளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நான் ஒரு படகோட்டி குடும்பத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறேன். அவர்களிடம் 130 படகுகள் உள்ளன. மகா கும்பமேளா நடந்த 45 நாட்களில், அவர்கள் ரூ.30 கோடி லாபம் ஈட்டியுள்ளனர். அதாவது ஒவ்வொரு படகும் ரூ. 23 லட்சம் சம்பாதித்துள்ளது. தினசரி அடிப்படையில், ஒவ்வொரு படகிலிருந்தும் அவர்கள் ரூ. 50,000-52,000 சம்பாதித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கும்பமேளாவின் போது துன்புறுத்தல், கடத்தல், கொள்ளை அல்லது கொலை போன்ற ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. 66 கோடி மக்கள் வந்து, பங்கேற்று, மகிழ்ச்சியுடன் வெளியேறினர். கலந்து கொள்ள முடியாதவர்கள் தாங்கள் தவறவிட்டதாக உணர்ந்தனர், ஆனால் கலந்து கொண்டவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர். இந்த கும்பமேளாவிற்காக ரூ. 7,500 கோடி செலவிடப்பட்டது. ஆனால், ரூ.3 லட்சம் கோடியாக வருவாய் ஈர்த்துள்ளது. ஹோட்டல் துறையில் ரூ.40,000 கோடி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் ரூ.33,000 கோடி, போக்குவரத்து பயணம் மூலம் ரூ.1.5 லட்சம் கோடி, மதப் பிரசாதங்கள் மூலம் ரூ.20,000 கோடி, நன்கொடைகள் மூலம் ரூ.660 கோடி, சுங்க வரிகள் மூலம் ரூ.300 கோடி மற்றும் பிற வருவாய் மூலம் ரூ.66,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் கூட, மகா கும்பமேளாவை பாராட்டியதை விட வேறு எதுவும் செய்யவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இருப்பினும், மகா கும்பமேளா குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துகள் கூட, ‘அமெரிக்கர்களின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் கூடிய ஒரு நிகழ்வு நடந்தது’ என்று கூறுகிறது; பிபிசி ‘மகா கும்பமேளா மனிதகுலத்தின் மிகப்பெரிய கூட்டம்’ என்று கூறுகிறது” என்று தெரிவித்தார்.