இந்தியாவில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும், வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பிரேசில் வகை கரோனா வைரஸ்களால் இந்தியாவில் 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் பஞ்சாப் மாநிலத்தில், இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட, மரபணு மாற்றமடைந்த கரோனா பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் இம்மாதம் 10 ஆம் தேதி (10.03.21) வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரின் மாதிரிகளை மரபணு வரிசைமுறை பரிசோதனை செய்ததில் 326 பேருக்கு இங்கிலாந்து வகை கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டோரில் 81 சதவீதம் பேர், இந்த மரபணு மாற்றமடைந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், இந்த மரபணு மாற்றமடைந்த கரோனா இளம் வயதினரை அதிகம் தாக்குவதாகவும், கோவிஷீல்ட் தடுப்பூசி இந்தவகை கரோனாவிற்கு எதிராக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதால், 60 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.