Skip to main content

ஆதரவு திரட்டும் கெஜ்ரிவால்; சீதாராம் யெச்சூரியுடன் சந்திப்பு

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Kejriwal rallying support; Meeting with Sitaram Yechury

 

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும் நியமிக்கவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும், எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

 

வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்’ என்று தெரிவித்தனர். ‘அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படிதான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 

இந்த தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் தேசியத் தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சில நாட்களுக்கு முன் பிறப்பித்தார். தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டம் (1991)-ஐ திருத்தும் வகையிலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை நிராகரிக்கும் வகையிலும் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது என ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அதற்கு மறுநாளே, தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தீர்ப்பினை செல்லாததாக ஆக்கும் வகையில் தேசியத் தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் "உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரவு ஒன்றை பிறப்பித்து டெல்லி மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்தது. ஆனால், ஒன்றிய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வந்து அதனை பறித்துவிட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர இருக்கிறேன். இந்தப் போராட்டமானது டெல்லி மக்களுக்கானது மட்டுமல்ல; இது இந்திய ஜனநாயகத்தையும், பாபாசாகேப் வழங்கிய அரசியல் சட்டத்தையும், நீதித்துறையையும், இந்த நாட்டையும் காப்பாற்றும் போராட்டம்; இதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

 

தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்ட்ரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்ற கெஜ்ரிவால் அங்கு சீதாராம் யெச்சூரியை சந்தித்தார். 

 

அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதை ஏற்கக்கூடாது என்பதை வலியுறுத்த இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக டெல்லி அரசுக்கு ஆதரவளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய சீதாராம் யெச்சூரி, “மத்திய அரசு கொண்டு வந்த அரசாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ளோம். இது அரசியலமைப்புக்கு எதிரானது. இது நீதிமன்ற அவமதிப்பும் கூட. நமது அரசியல் சட்டத்தை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்