இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவின் பொக்கிஷமாக பார்க்கப்படும் யோகா கலையையும் அதன் பெருமைகளையும் நாடு முழுவதும் பரப்ப இந்தியாவில் மட்டும் ஐந்தாயிரத்திற்கு அதிகமான இடங்களில் யோகா பயிற்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று உத்ரகாண்ட்டில் டேராடூனில் வன ஆராய்ச்சி மையத்தில் நடந்த யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பிரதமர் மோடி அவர்களும் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அதேபோல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அந்த வரிசையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பிணராய் விஜயன் கலந்துகொண்டார். பின்பு யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிணராய் விஜயன் உலகிலுள்ள எல்லா இடங்களிலும், மனித உடலையும் மனதையும் புத்துணர்ச்சி நிலைக்கு கொண்டுவர எவ்வளவோ புதிய புதிய பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தியாவின் யோகா கலைதான் சிறந்த ஒன்றாக திகழ்கிறது.
யோகா கலை எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல ஆனால் இங்கு சில அமைப்புகள் இந்த கலைக்கு மத சாயம் பூச தீவிரம் காட்டுகின்றன. ஆனால் யோகா எந்த மதத்தையும் சார்ந்த ஒன்றல்ல. சாதி, மதம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா மக்களும் யோகாவை மேற்கொள்ளலாம். ஆனால் யோகா செய்யும்போது மதசார்பற்ற மனதுடன் மேற்கொள்ளவேண்டும் அதுதான் உன்னதமானது.
யோகா கலையை மதமாக மாற்ற முற்சிக்கும் சில அமைப்புகளின் நடவடிக்கையால் யோகா சாதாரண மக்களிடமிருந்து தனிப்படுத்தப்பட்டு நிக்கிறது. மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியையும்,ஆரோக்கியத்தையும் தரும் யோகாவை சர்வதேச அளவில் பயிற்றுவிக்க கேரள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கூறினார்.