நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் அதன் தீவிரம், தடுப்பு நடவடிக்கைகள் எனச் சென்றுகொண்டிருந்தாலும், முதல் அலையின் போது இல்லாத ஒரு மிகப்பெரிய பிரச்சனையை தற்பொழுது நாடு சந்தித்து வருகிறது. அதுதான் 'ஆக்சிஜன் தட்டுப்பாடு'.
கடந்த 21 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், அடுத்தடுத்து 22 நோயாளிகள், ஆக்சிஜன் தடைப்பட்டதால் தங்களது ‘மூச்சை’ நிறுத்திக்கொண்டனர். இதனை நாசிக் மாவட்ட கலெக்டர் சுராஜ் மந்திர் உறுதிபடுத்தியிருந்தார். அதேபோல் கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், அடுத்தடுத்து 7 நோயாளிகள் உயிரிழந்தனர். பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன் வினியோகத்தில் ஏற்பட்ட தடையே இதற்குக் காரணம் என, உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை வழக்கம்போல் மறுத்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்த குழு அமைத்துள்ளனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க் கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.
பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 20 ஆம் தேதி காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடியின் உரைகூட ஆக்சிஜனை மையப்படுத்தியே இருந்தது. ''ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நாம் பூர்த்தி செய்வோம். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த விலையில் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படுகிறது'' எனப் பேசியிருந்தார்.
இன்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் கூட "ஆக்ஸிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், அதனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதைத் தடுக்கக்கூடாது. அனைவரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கில் இணைந்து பணியாற்றினால் வளங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாது. மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தில் ரயில்வே மற்றும் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் டேங்கர்கள் விரைந்து சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் " எனப் பிரதமர் கூறியுள்ளார்.
இப்படி ஆக்சிஜன் தட்டுப்பாடு, கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனைகள் இந்தியாவில் உச்சத்தை நோக்கி உள்ள நிலையில் கூகுளில் ஆக்சிஜன் தொடர்பான தகவல்களை தேடும் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே ஆக்சிஜன் குறித்த தேடல்கள் இந்தியாவில் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த பயனர்கள் 'ஆக்சிஜன்' என்ற வார்த்தையை ஒட்டிய தரவுகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். ஒருபக்கம் டெல்லியில் கரோனாவால் இறந்தவர்களை தகனம் செய்யத் தகன மேடைகள் ஓய்வின்றி இயங்கிவரும் நிலையில், அதே டெல்லியில் சில மருத்துவமனைகளில் முழுவதுமாக ஆக்சிஜன் தீர்ந்து நோயாளிகள் உயிருக்குப் போராடி வருவது தொடர்பான தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.