அதிகாரிகள் இலவச கழிப்பறைக்கான நிதி ஒதுக்க மறுத்ததால், பிச்சையெடுத்த பணத்தில் கழிவறை கட்டிய பெண் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பீகார் மாநிலம் சுபாவுல் மாவட்டம் பத்ரா உத்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா கட்டூன், 40. விதவைப் பெண்ணான இவர் தன் மகனுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தன் வீட்டருகே கழிவறை கட்டுவதற்காக நிதி கோரி, உள்ளூர் அதிகாரிகளிடம் நிதி கோரியிருக்கிறார் அமீனா. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி அந்த அதிகாரிகள் நிதி ஒதுக்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில், சொந்தமாகக் கழிவறை கட்டும் முனைப்பில் இருந்த அமீனா, அக்கம்பக்கத்து கிராமங்களுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் பிச்சை எடுத்துவந்த பணத்தில் புதிய கழிவறை ஒன்றைக் கட்டியெழுப்பி உள்ளார். அமீனாவின் இந்த செயலுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட நிர்வாகம் பாராட்டு விழா நடத்தியுள்ளது. அப்போது பேசிய அமீனா, ‘நான் அன்றாட வாழ்விற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஏழைப்பெண். என்னிடம் கழிவறை கட்ட வசதியில்லை. திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது அவமானம். அதனால், பிச்சை எடுத்து கழிவறை கட்டினேன். அந்த வேலையில் ஈடுபட்ட கட்டிட ஊழியர்கள் என்னிடம் கூலி வாங்க மறுத்துவிட்டனர்’ எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை அறிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் 2 கோடி கூடுதல் கட்டப்படும் என்றும் அறிவித்தது இந்த இடத்தில் நினைவுகூரத் தக்கது.