கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா ரெட்டி. இவர் தனது காதலி சுருதியுடன் (29) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போகனஹள்ளி என்ற இடத்தில் இவர்கள் சென்ற போது, பின்னால் வந்த கார் ஒன்று பைக் மோதியது. உடனே, காரில் இருந்து இறங்கிய 2 பேர், வம்சி கிருஷ்ணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காதலர்களின் செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த வம்சி கிருஷ்ணா, இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கார் ஓட்டுநர் மனோஜ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், காதலன் வம்சி கிருஷ்ணாவுடனான உறவை முறித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில் வம்சியுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை வைத்து, வம்சி வருங்காலத்தில் தன்னை தவறாக பயன்படுத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
புகைப்படங்களை அழித்துவிட்டதாக வம்சி கூறினாலும், அதை நம்பாமல் இருந்த சுருதி, வம்சியுடைய செல்போனை திருட நினைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், மனோஜ் என்பவரை சுருதி தொடர்புகொண்டு, கொள்ளையை அரங்கேற்றுமாறு கூறி அதற்கு ரூ1.1 லட்சம் வரை கொடுத்திருக்கிறார். அதன்படி, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சம்பவம் நடந்த அன்று, மனோஜை வற்புறுத்தி தன்னை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சுருதி கூறியுள்ளார். அதன்பிறகு, சுருதி திட்டம் தீட்டியது போல், மனோஜும் அவரது கூட்டளிகளும் சேர்ந்து போலியான விபத்து ஒன்றை நடத்தி வம்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரண்டு பேருடைய செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த வம்சியுடைய செல்போன் சுருதி கைக்கு வந்த பிறகு, அவர் சிங்கசாண்டிரா ஏரியில் தூக்கி வீசியுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மனோஜ், சுரேஷ் குமார், ஹொன்னப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ஆபாச புகைப்படங்களை அழிப்பதற்காக போலியான விபத்து ஒன்றை ஏற்படுத்திய சுருதியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.