கரோனா வைரஸ் பரவலால் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்படுவதோடு, இதற்காக செலுத்தப்பட்ட பணம் பிடித்தம் இன்றி திரும்ப வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமிய மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணத்தை இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள நிலையில், சவுதியும் இதனால் பாதிப்புகளை சந்தித்துள்ளது. எனவே வெளிநாட்டிலிருந்து வரும் ஹஜ் பயணிகளை சவுதியில் அனுமதிப்பதில் அந்நாட்டு அரசு பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்படுவதோடு, இதற்காகச் செலுத்தப்பட்ட பணமும் பிடித்தம் இன்றி திரும்ப வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, "சவுதி அரேபியாவின் ஹஜ், உமரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது கரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவிலிருந்து யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என அவர் ஆலோசனை கூறினார். இதுகுறித்து இந்திய தரப்பில் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பின் இந்தாண்டு ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்படுவதோடு, இதற்காக விண்ணப்பித்திருந்த 2,13,000 பேருக்கும் அவர்கள் செலுத்திய பணம் பிடித்தமின்றி வங்கிக்கணக்கு மூலம் வரவு வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன" எனத் தெரிவித்தார்.