எட்டு உயிர்களை பலி கொண்ட அரிக்கொம்பன் யானை ஒரு வாரப் போராட்டத்திற்குப் பிறகு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்த சின்னகானல் பகுதியில் நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டது.
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதும், விளைநிலங்களை சேதம் செய்வதும் தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகவே தொடர்ந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சின்னத்தம்பி, விநாயகன் உள்ளிட்ட எவ்வளவோ யானைகளை சொல்லலாம். இந்த நிலையில் கேரளாவில் யானை ஒன்று தனது குட்டியுடன் குப்பை கூளங்களை கிளறி உணவு தேடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரிக்கொம்பனின் பூர்வீகமாக கருதப்படும் கேரள மாநிலம் சின்னகானல் பகுதியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சின்னகானல் பகுதியில் ஊராட்சி குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள இந்த குப்பை கிடங்கில் தாய் யானை ஒன்றும் குட்டி யானை ஒன்றும் புகுந்து அங்கிருந்த குப்பை கழிவுகளை கிளறி உணவு தேடும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களது அதிர்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை யானைகள் உண்பதால் யானைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அந்த இரண்டு யானைகளையும் மீட்டு வனத்திற்குள் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.