குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதில் பிபின் ராவத்துடன் பயணம் சென்ற அவரது மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் மதுலிகா. அவரது தந்தை குன்வர் சிங், இவர் கோத்மா தொகுதியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குவாலியரில் பள்ளிப் படிப்பை முடித்த மதுலிகா, டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்றார்.
பிபின் ராவத்- மதுலிகா தம்பதிக்கு 1986- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கிருத்திகா, தாரணி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச்சங்கத்தின் தலைவராக இருந்த மதுலிகா, ராணுவ வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தின் நலனுக்காகப்பாடுபட்டார்.
மேலும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், புற்றுநோயாளிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், சமூக பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களிலும் பணிபுரிந்தார்.