சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. தமிழக அரசும் இதேபோல் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக அரசின் வழக்கில் ஆளுநர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு ஆளுநர் மீது தொடர்ந்துள்ள வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு நடைபெற்ற விசாரணையில், 'மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும். எவ்வாறு அரசின் செயல்பாடுகளை முடக்க முடியும். ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை கொடுத்தது யார்? ஆளுநர்கள் தாங்கள் செய்யும் தவறின் தீவிரத்தை உணர்கிறீர்களா இல்லையா? நடப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது' என பஞ்சாப் ஆளுநருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.