டெல்லியில் தீபாவளிக்கு பிறகிலிருந்தே காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதனாலும், காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைந்ததாலும் அங்கு காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதனையடுத்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லியின் காற்று மாசு அளவை கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நடவடிக்கைகளை எடுக்க முழு அளவில் தயாராக இருக்குமாறு அம்மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை அறிவுத்தியுள்ளது.மேலும், மக்கள் தங்களது வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வாகனங்களின் பயன்பாட்டை 30 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "காற்றின் தரக் குறியீட்டை 500 லிருந்து குறைந்தபட்சம் 200-ஆகவாவது குறைப்பது எப்படி என கூறுங்கள். இரண்டு நாட்கள் ஊரடங்கு போன்று எதையாவது யோசிக்க முடியுமா?. அவரச நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இரண்டு மூன்று நாட்களில் காற்று மாசுகுறைய வேண்டும்" என மத்திய அரசிடம் தெரிவித்தது.
மேலும் உச்சநீதிமன்றம், "டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் அது இன்னும் மோசமாகும். பயிர் கழிவுகளை எரிப்பதை நீண்டகால நடவடிக்கைகள் மூலமாக கையாள வேண்டும். ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய்யாமல், ஒருவர் மீது ஒருவர் பழி கூறாமல் அவசர முடிவினை எடுக்க வேண்டும்" என தெரிவித்தது. மேலும் ஹரியானா மற்றும் பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பதை இரண்டு நாட்களுக்காவது நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே காற்று மாசுபாடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரச கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.