புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இந்த இட ஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கி உள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் கனிமொழி எம்.பி.கலந்து கொண்டு பேசுகையில், “பாஜக மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவையும் அரசியலுக்கு பயன்படுத்துகிறது. அனைத்து தரப்பினரும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய மசோதாவில் பாஜக அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது. பெண்களை மதிப்பது போன்று ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை என தந்தை பெரியார் கூறியிருந்தார். பாஜகவினரின் செயலை பார்க்கும் போது பெரியார் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு மசோதாவில் இது போன்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறுவரையறைக்கு பிறகே இடஒதுக்கீடு அமலாகும் என நிபந்தனை வித்துள்ளனர். மறுவரையறைக்கு பிறகே இடஒதுக்கீடு அமல் என்ற நிபந்தனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள தென் மாநில மக்கள் வஞ்சிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும், தென்னிந்திய மக்களின் அச்சத்தை பிரதமர் மோடி போக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை மட்டுமல்லாமல், தாங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமையும் இருக்க வேண்டும். தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதைய நிலையே தொடர்ந்தால் மட்டுமே தென்னிந்திய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்” என பேசினார். முன்னதாக கனிமொழி பேச தொடங்குவதற்கு முன்பே பாஜகவினர் கூச்சலிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இது தான் பாஜகவினர் பெண்களை மதிக்கும் முறையா என்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.