நாட்டின் 16வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (18/07/2022) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதற்கான மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
குடியரசுத் தலைவர் இந்திய நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம். நாடாளுமன்ற அவைகளைக் கூட்டவும், அவற்றை முடிவுக்கு கொண்டு வரவும், மக்கலவையைக் கலைக்கவும் அவருக்கு அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஒருவரை பிரதமராக்கவும், ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுக்கவும், குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
இலக்கியம், கலை, அறிவியல் துறைகளில் சிறந்த 12 பேரை மாநிலங்களவையில் உறுப்பினர்களாக நியமிக்க குடியரசுத் தலைவர் அதிகாரம் படைத்தவர் ஆவார். நாடாளுமன்றம் கூடாதபோது குடியரசுத் தலைவர் அவசர சட்டங்களை இயற்றலாம். இரண்டு அவைகளில் ஒன்று கூடாத நிலையிலும், அவசரச் சட்டத்தை நிறைவேற்றலாம்.
நிதி மசோதாவைத் தவிர, வேறு எந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல், பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் உள்ளிட்ட இந்திய அரசமைப்பின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்படும்.
குற்றங்களை மன்னிக்கவும், மரண தண்டனை உள்ளிட்ட எந்தவொரு தண்டனையும் குறைக்கவும், நிறுத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. நாடு முழுவதுமோ, குறிப்பிட்ட சில பகுதிகளிலோ, மாநிலத்திலோ நெருக்கடி நிலையை அறிவித்து அடிப்படை உரிமைகளில் சிலவற்றை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவர் அதிகாரம் படைத்தவர் ஆவார்.
நாடுகளுக்கு இடையிலான வெளியுறவு நடவடிக்கைகளில், இந்தியாவின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவரே செயல்படுகிறார். வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் அவரே பெற்றுள்ளார்.