உக்ரைன் நாட்டில் எஞ்சியிருக்கும் இந்தியர்களைத் திரும்ப அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் போரால் சிக்கியிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்களா, அப்படி எனில் காயமடைந்தவர்கள், எஞ்சியிருக்கும் இந்தியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்படி மக்களவையில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், தயாநிதிமாறன், கனிமொழி, பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
அதில், பிப்ரவரி 1- ஆம் தேதியில் இருந்து இதுவரை 25,000 இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் உக்ரைனில் பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்ப தயாராக இருக்கும் எஞ்சிய இந்தியர்களுடன், அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் சுமார் 50 இந்தியர்கள் மட்டுமே எஞ்சியிருக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இந்தியர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருவதாக அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆப்ரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 90 விமானம் மூலம் இந்தியர்களுக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.