Skip to main content

''வழிபாட்டை வைத்து வன்முறைக்கு இடமளித்திடக்கூடாது ''-சீமான் கருத்து

Published on 06/02/2025 | Edited on 06/02/2025

 

"Violence should not be allowed for worship" - Seeman

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும்  வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த பலரும் மதுரை பழங்காநத்தத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில், 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு; அன்று தம் சீடர்க்கெல்லாம்,, அறிவுரை கூற எண்ணி,, மன்றினை தொடங்கிய இயேசுபிரான் கல்வாரி குன்றின் மேல் ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே அருள்நெறி பொழிந்தார்;

நபி பெருமானருக்கு ஹிரா மலையின் மீதே புனித குரான்  அருளப்பட்டது; கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவர்த்தன மலை,  சிவபெருமானுக்கு கயிலை மலை, பார்வதிக்கு பர்வதமலை என எல்லா சமயங்களும் இறைவனோடு இயற்கையை பொருத்தியே போற்றுகிறது. வழிபாடு என்பதே பேரன்பு வெளிச்சத்தின் வெளிப்பாடாகும். எனவே, வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி மதவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற முயல்பவர்களுக்கு தமிழர் மண்ணும், மக்களும் ஒருபோதும் இடமளித்திடக்கூடாது.

இந்திய பெருநிலம் முழுவதும் மதக்கலவரங்கள் நிகழ்ந்து பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, நாடே நரகமான கொடும் நாட்களிலும்கூட தமிழர் நிலம் மட்டும் தம் பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியாலும், மானுட நேயத்தாலும் மதமோதல் நிகழாமல் அமைதி காத்து உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது. ஆகவே, என் உயிர் தமிழ்ச்சொந்தங்கள் ஒரு மொழி பேசி, ஒரு மண்ணில் பிறந்து, ஒரு  தாய் வயிற்று மக்களாக வாழும் நாம், நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சிக்கலையும் நாமே பேசி நமக்குள் தீர்த்துக்கொள்ள முடியும். இருபுறமும் உள்ள சமயப்பெரியவர்கள் அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!

திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள் அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை ஒற்றுமையுடன் உரத்துச்சொல்வோம்! தமிழர் நிலம் எந்த காலத்திலும் மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை உலகிற்கு உணர்த்துவோம். என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்