அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என அதிரடி உத்தரவுகளை அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் அதிரடி உத்தரவுகள், மற்ற நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருந்தது.
அதன்படி, சட்டவிரோதமாக குடியேறிவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிவர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அதில் டெக்காசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 205 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வெள்ளை மாளிகை மற்றும் இந்திய அரசு தரப்பில் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்டு அழைத்துவரப்பட்டது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்புபடை இந்தியர்களை 'ஏலியன்கள் வெளியேற்றப்பட்டனர்' எனக் குறிப்பிட்டு வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்திலும் பெரும் புயலை கிளப்பியது.
'இந்தியர்கள் மிருகத்தனமாக நடத்தப்பட்டுள்ளனர். இதில் மத்திய அரசின் நடவடிக்கை என்ன?' என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும்வாதங்களை முன்வைத்தன. தொடர்ந்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து விளக்கம் அளித்தார். ''சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்துவது என்பது புதிது அல்ல. 2009, 2010 என கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்று நாடு கடத்தப்படுகிறார்கள். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் தங்கள் அனுபவித்த வேதனையை பகிர்ந்துள்ளனர். இந்தியர்களை தவறாக நடத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கூறியுள்ளோம். கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தால் கழிவறைக்குகூட செல்வதில் சிரமத்தை சந்தித்துள்ளனர். இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.