மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் பாஜக கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் பாஜக தொண்டர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மேற்கு வங்க பாஜக தலைமை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. நேற்று நடந்த போராட்டத்தில் ரயில் மறியல் மற்றும் ஆங்காங்கே போராட்டம் என மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கு முன்பு இருந்த நிலைமையை விட அம்மாநிலத்தில் நிலைமை மோசமானதால் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க மாநில அரசு கடிதம் அனுப்பியது.
அதில் மாநிலத்தில் அமைதி, சட்ட ஒழுங்கை உடனடியாக நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு பதிலளித்துள்ள மேற்கு வங்க மாநில அரசு காவல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் மாநிலத்தில் நிலவி வரும் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆளுநர் கேசரிநாத் திரிபாதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்து ஆளுநர் கேசரிநாத் மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பற்றி பேசியுள்ளதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை மோதல் சம்பவங்கள் நீடிக்கும் நிலையில், அம்மாநில அரசு அமைதியை நிலைநாட்ட தவறினால் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரையின் பெயரில் மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.