
அனில் அம்பானி நடத்தி வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஷ்டமானதால் ₹45,000 கோடி கடனில் தத்தளித்து வந்தார் அவர். இந்நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார். தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,500 கோடி தர வேண்டி இருந்தது. அதில் முதல் தவணையாக 550 கோடியை 12 சதவீத வட்டியுடன் டிசம்பர் மாதத்திற்குள் எரிக்ஸனுக்கு தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் மாதம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் அவர் இன்னும் அந்த குறிப்பிட்ட தொகையை தராததால் எரிக்ஸன் நிறுவனம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.