கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சமீபத்தில் ராஜினாமா செய்தும், பாஜகவில் இணைந்தும் வருகின்றனர். இதனால் அம்மாநில அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 107 எம்.எல்.ஏக்களும் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் முகுல் ராய் கூறியுள்ளார். 2017- ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முகுல் ராய் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் முகுல் ராய் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க பாஜக தலைவர் முகுல் ராய் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சில உத்தரவுகளை முதல்வர் மம்தா பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.