மக்களவை தேர்தலுக்கு பின் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே தொடர் மோதல்களும், கலவரங்களும் நடந்து வருகின்றனர்.
24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்காளி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக தொண்டர்கள் 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்தார். மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேரை பாஜகவினர் கத்தியால் குத்திக் கொன்றதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மேற்குவங்க அமைச்சருமான பர்த்தா சட்டர்ஜி இதுகுறித்து கூறுகையில், "மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக திட்டமிட்டே இந்த கலவரங்கள் நடக்கிறது. மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முறைகேடாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பான முறையில் பாஜக செயல்படுகிறது. அவர்களை எதிர்ப்பவர்களை நசுக்க மத்திய அரசு முயலுகிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு இதனை எதிர்க்க வேண்டும்" என கூறினார்.