நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்றாம் கட்டத் தேர்தல் நாளை (07-05-24) கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பல்வேறு அம்சங்களை கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில், முக்கியமானது தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை வழங்குவது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. அதே வேளையில், பா.ஜ.க இதைக் கடுமையாக விமர்சனம் செய்தது.
சில தினங்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுக்க நினைக்கிறது” என்ற வகையில் பேசினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம், ரத்லமி பகுதியில் இன்று (06-05-24) காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர், “பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் அரசியலமப்பை முடக்க வேண்டும், இதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன.
பா.ஜ.க 400 இடங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்தார்கள். ஆனால், 400ஐ மறந்து விடுங்கள், அவர்களுக்கு 150 இடங்கள் கிடைக்காது. இட ஒதுக்கீட்டை நீக்குவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் இருந்து சொல்ல விரும்புகிறேன், 50 சதவீத வரம்பைத் தாண்டி இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு தேவையோ அவ்வளவு இட ஒதுக்கீடு அளிப்போம்” என்று பேசினார்.