நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் எதிர் கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த தலைவரை காங்கிரஸ் சீக்கிரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு நடைபெற்றது. இதில் புதிய தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்திலிருந்து சோனியா காந்தி பாதியிலேயே வெளியேறினார். தலைவர் பொறுப்பிற்கு புதியவரை தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய தலையீடோ அல்லது ராகுல் காந்தியின் தலையீடோ இருக்க கூடாது என்பதாலேயே, தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையில் பங்கேற்காமல் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.