இந்திய இராணுவ தளபதி நரவனே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சீனாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள நிலை குறித்து பேசிய நரவனே, "கடந்த ஆண்டு ஜனவரி முதல், நமது வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கு எல்லையில் நாங்கள் தொடர்ந்து மிக உயர்வான தயார்நிலையைப் பராமரித்து வருகிறோம். அதே நேரத்தில், சீன இராணுவத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேற்கு எல்லையில், பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கட்டுப்பாட்டு கோட்டின் வழியாக ஊடுருவும் தொடர்ந்து நடைபெற்றது. இது ஒருமுறை நமது மேற்கத்திய அண்டை நாட்டின் மோசமான செயல்பாட்டை அம்பலப்படுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.
சீனா கொண்டுவந்துள்ள புதிய எல்லை சட்டம் தொடர்பாக பேசிய நரவனே, "சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் கடந்த காலத்தில் நாம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத எந்தச் சட்டமும் நம்மை கட்டுப்படுத்த முடியாது" எனத் தெரிவித்துள்ளார். சீனாவுடனான பேச்சுவார்த்தை மற்றும் அந்தநாட்டுடன் மோதல் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பதிலளித்த நரவனே, "பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நமது கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது. நமக்கு எதிராக எறியப்படும் எதையும் சந்திக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். இதை மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக அளிக்கிறேன். போர் அல்லது மோதல் எப்போதும் கடைசி முயற்சியாகும். போர் ஏற்பட்டால் நாம் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், படை விலகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டாலும் அச்சுறுத்தல் எந்த வகையிலும் குறையவில்லை எனக் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நாகலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.