நோயாளி ஒருவர் உடலில் இருந்து 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை டெல்லி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். பொதுவாக, மனித சிறுநீரகம் 120 முதல் 150 கிராம் எடை இருக்கும். ஆனால், எனவே, இந்தியாவில் மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிக பெரிய சிறுநீரகம் இது என்று சொல்லப்படுகிறது. சிறுநீரகம் முழுவதும் நீர்கட்டிகள் உருவாகி ஆட்டோஸோமல் டொமினன்ட் பாலிசிஸ்டிக் என்று அழைக்கப்படும் சிறுநீரக நோயால் இந்த நோயாளி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நோய் தாக்கியவர்களின் சிறுநீரகம் பொதுவாக மிகப் பெரியதாகிவிடும் என்று இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் சச்சின் கதுரியா இது பற்றி கருத்து தெரிவிக்கையில், " உடலில் குறைந்தபட்சம் சிறிதளவு சுத்திகரிப்பு செயல்பாடுகளையாவது மேற்கொள்ளும் என்பதால், நோய் தொற்று மற்றும் உள் இரத்தப்போக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் சிறுநீரகத்தை மருத்துவர்கள் அகற்றுவதில்லை" என்றார்.