நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியின் அண்டை மாநிலமான தமிழகத்தில் கடந்த வாரம் தொற்று கண்டறியப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பொது வெளிகளில் தடை விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதுச்சேரியிலும் இன்று 80 வயது முதியவருக்கும், 20 வயது இளம் பெண்ணுக்கும் ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் தொற்றானது அதிகம் பரவும் வேகம் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் நோய்த்தொற்று பரவலை தடுக்க மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி மாநிலத்தில் பொதுவெளியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட 45 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து, ‘பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கிராமப்புற மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகந்நாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், புதுச்சேரியில் டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபான விற்பனைக்குத் தடை. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மதுபானக்கடை, பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுவிற்பனை கூடாது. பொதுஇடங்களில் மது அருந்தக்கூடாது. விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டு வழக்கு ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.