'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்' என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை, கடந்த 35 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆளுநரை நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இதனால், மாநில வளர்ச்சி பாதிக்கப்படுவதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் உத்தேசம் இல்லை' என மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி மத்திய அரசைக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்றத்தில் அதைப் பதிவு செய்யாமல், தற்போது மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்கத் தயாரா? என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி கோரியுள்ளார். மத்திய அரசு நமது உரிமைகளைப் பறிப்பதால் காங்கிரஸ் கட்சியின் தலைமையைக் கேட்டு நாங்கள் முடிவைத் தெரிவிப்போம்.
தேர்தல் புறக்கணிப்பு என்ற கோரிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து வரவேண்டும். அப்போது காங்கிரஸ் கட்சியும் தலைமையைக் கேட்டு தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவுசெய்வோம். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகாலமாக அமைச்சரவையில் முடிவெடுத்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் செல்லும்போது அதை நிறைவேற்ற கேள்வியும் தடையும் ஏற்படுகிறது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன மரியாதை? அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆளும் அரசின் நடவடிக்கைகளை முடக்கும் வேலையில் ஆளுநர் ஈடுபடுவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகின்றது. இதை எந்த அரசியல் கட்சியும் கேட்கவில்லை.
அதனால், எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் தேர்தலைப் புறக்கணிப்பது பற்றி முடிவெடுப்போம். புதுச்சேரியில் அதிகாரமில்லாத சட்டமன்றம் இருந்தும் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையரிடம் எங்களின் கருத்தைத் தெரிவிப்போம்” இவ்வாறு அவர் கூறினார். இந்த நேர்காணலின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஆர்.கே.அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.