கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி சுமார் ரூபாய் 200 கோடிக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளைத் துவங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 30% வரை வட்டி ஈட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டது கடந்த சில தினங்களுக்கு முன் தெரியவந்தது. இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ரூசோ கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதேபோல் ஹேஷ்பே என்ற நிறுவனம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.எல்.எம் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துவிட்டு கமிஷன் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 300 நாட்களில் 3 லட்ச ரூபாயாக பணம் அதிகரிக்கும் என அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, நடிகைகள் காஜல், தமன்னா போன்றோரை அழைத்து விளம்பரம் செய்ததன் அடிப்படையில் நம்பி பணத்தை முதலீடு செய்ததாகவும் பணத்தை இழந்தவர்கள் பரிதாபமாகத் தெரிவிக்கின்றனர்.