உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், விஜய யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் அதை நடத்தி முடிப்போம். இதன்மூலம் தகுதியானோர் மக்கள் தொகையில் அவர்களின் பங்கிற்கு ஏற்ப உரிமைகளைப் பெற முடியும்".எனக் கூறியுள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் தனது கட்சித் தலைவர்களை குறி வைத்து நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்து பேசியுள்ள அகிலேஷ் யாதவ், "சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை பாஜகவின் பிரிவுகளாகவே நடந்து கொள்கின்றன. மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (தேர்தலின்போது) செயல்பட்ட அவர்கள் தற்போது உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் மற்ற மாநிலங்களில் தடுத்ததை போல உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வரலாற்று தோல்வியை அவர்களால் தடுக்க முடியாது. பாஜகவின் இதுபோன்ற அனைத்து தந்திரங்களையும் சமாஜ்வாடி எதிர்கொள்ளும்" எனக் கூறியுள்ளார்.