
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
அண்மையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததை தொடர்ந்து அதற்கடுத்த நகர்வாக தமிழகம் வந்திருந்த அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை அறிவித்திருந்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட தீவிர பணிகளில் அதிமுக இறங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சிப் பணிகள்; பூத் கமிட்டி குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுறுத்தல்களை தர உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். முன்னதாக செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் செங்கோட்டையன் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்ததற்கு பிறகு நடைபெறும் முதல் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால் இதில் கூட்டணி குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் நடத்துவார் எனவும் கூறப்படுகிறது.