Skip to main content

'ஆத்திரத்தில் மல்லுக்கட்டும் ஆளுநர்; இதுதான் பாஜகவின் டிஎன்ஏ'-அமைச்சர் கோவி.செழியன் பதிலடி

Published on 25/04/2025 | Edited on 25/04/2025
'Governor in rage, let him fight; this is BJP DNA' - Minister Kovi Chezhiyan's response

தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு இன்றும், நாளையும் (ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26ஆம் தேதி) என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநாட்டுக்குத் தலைமையேற்றுள்ளார்.

அதேசமயம் ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்காமல் தடுத்தது அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. உயர்கல்வி அமைச்சர் துணைவேந்தர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்தும் பலனளிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் காவல்துறையைப் பயன்படுத்தினார். மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊட்டியை அடைந்த மற்றவர்களை நள்ளிரவில் மாநில காவல்துறையினர் தங்கள் ஹோட்டல் அறைகளில் தட்டிச் சென்றனர். அவர்கள் உயிருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டனர். காவல்துறையின் இத்தகைய அத்துமீறல்! இது ஒரு காவல் துறை அரசா? என எண்ண வைக்கிறது.

மாநிலத்திற்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரம் உயர்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறாரா? மேலும் எந்தவொரு தர மேம்பாடும் அவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும். அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்?' என தெரிவித்திருந்தார்.

'Governor in rage, let him fight; this is BJP DNA' - Minister Kovi Chezhiyan's response

இந்நிலையில் ஆளுநரின் மிரட்டல் குற்றச்சாட்டுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயித்த நீதிபதிகள், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தனர்.

இந்தத் தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்து மாநாட்டைத் துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்குத் தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார். அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணைவேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன?

அண்மையில் கூட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் பதவிக்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அரசியல் செய்ய ஆசைப்பட்டால், ஆளுநர் ரவி அந்தப் பதவியில் போய் அமர்ந்திருக்கலாமே! எதற்கு ஊட்டிக்குப் போனார்?

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்.

ஆளுநர்கள் அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தராகச் செயல்படுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்கள் இருப்பதைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன் மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின் படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது. ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது” எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்!

மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது. பா.ஜ.க-வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாகக் கைகோத்து இணைத்து வைத்தார். பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்குக் குடைச்சலைக் கொடுத்தார்கள்.

மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்