
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்ட பகுதியில் உள்ள எலவனாசர்கோட்டை எடைக்கல் திருநாவலூர் களமருதூர் எறையூர் சேந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் ஆற்று மணல் இரவு நேரங்களில் லாரியில் அல்லப் பட்டு வருகிறது. அதேபோல் இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள், வண்டல் மண் உள்ளிட்ட கனிம வளங்களை இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அள்ளப்பட்டு வந்தது.
தொடர்ந்து இப்பகுதியில் ஆற்று மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார் அளித்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று, “ஒரு நாளைக்கு மணல் அள்ள வேண்டுமென்றால் ஒரு லாரி மணல் அல்ல எனக்கு ஐந்தாயிரம் ரூபாயும் உனக்கு ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும். அதேபோல் ஒரு வண்டிக்கு மேல மூன்று அல்லது அதிக வண்டிகள் மணல் அல்ல அதற்கு தகுந்தார் போல் பேரம் பேசி முடிக்க வேண்டும்..” எனப் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் தீயாக பரவி வருகிறது.
இதனிடையே, ஆடியோ விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப்பை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.