Skip to main content

பஹல்காம் தாக்குதல்; மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ அதிரடி கைது!

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

Assam MLA arrested for making comments against the central government at Pahalgam incident

 

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. அந்த பயங்கரவாத அமைப்பை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதாக எம்.எல்.ஏ ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கட்சியின் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிப்பவர் அமினுல் இஸ்லாம். இவர் பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். பிப்ரவரி 2019 இல் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வந்த வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதும் அரசாங்கத்தின் சதித்திட்டங்கள் என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது. அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. 

இதையடுத்து, எம்.எல்.ஏ அமினுல் இஸ்லாம் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளது. இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகிஸ்தானைப் பாதுகாக்க முயற்சிக்கும் எவர் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம். சமூக ஊடகங்களில் எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் அறிக்கை மற்றும் வீடியோக்களில்,  அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வழக்குப் பதிவு செய்தோம்” என்று கூறினார்.

இதற்கிடையே, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் பதருதீன் அஜ்மல் இது குறித்து கூறுகையில், “இது எங்கள் கட்சியின் கருத்து அல்ல. நாங்கள் ஏற்கனவே எங்கள் முடிவுகளை தெளிவுபடுத்திவிட்டோம். இந்த மாதிரியான சூழ்நிலையில், நாங்கள் எப்போதும் அரசாங்கத்துடன் ஒற்றுமையாக நிற்கிறோம். பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை, பயங்கரவாதத்தைப் பரப்புபவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவதூறு செய்கிறார்கள். அமினுல் இஸ்லாத்தின் கருத்து எங்கள் கருத்து அல்ல” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்