பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது மகளுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்கச் சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று எடியூரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாகவும்’ கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் கர்நாடகா முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் போக்சோ வழக்கில் எடியூரப்பாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தேவைப்பட்டால் எடியூரப்பாவைக் கைது செய்வோம் என்றும் அமைச்சர் பரமேஸ்வரா பேட்டி அளித்துள்ளார்.