தமிழகம் உட்பட அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மொத்த இடங்களில் 15% இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
முதற்கட்ட கலந்தாய்வு 27, 28 ஆகிய தேதிகளிலும் 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆம் தேதிகளிலும் நடத்தப்படும். அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து 3 ஆம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெறும். இதற்கான முடிவுகள் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 ஆம் தேதி மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 40,193 பேர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழக இட ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைவில் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.