ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் புதிதாக ஆரம்பித்த ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சாம்ஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம், பாந்தரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகப் போட்டியிடுகின்றன.
இத்தகைய பரபரப்பான சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 6 ஆம் தேதி (06.09.2024)வெளியிட்டார். அதில், ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க ‘மா சம்மன் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ‘பிரகதி சிக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம். ஜம்முவில் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக, 1 லட்சம் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். ரூ. 25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்களில் செயல்படும் பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு (காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவில் 8 தொகுதிகளுக்கு) முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (18.09.2024) காலை 7 மணி முதல் தொடங்கியது. இதனையடுத்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.