மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதேபோல் சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்தியப் பிரதேச போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
2 கோடியே 58 லட்சம் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், கிட்டத்தட்ட அதிகாலையிலேயே 13 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களுடைய நடமாட்டம் குறைவாக இருக்கிறது. இருப்பினும் 10 மணிக்கு மேல் வாக்குப்பதிவில் மக்கள் அதிகப்படியாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரி வாக்குப் பதிவுகள் முடிந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.