மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (30/09/2021) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதேபோல், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மாலை 06.00 மணிவரை நடைபெறும் வாக்குப்பதிவிற்காக, வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியபோதும், மம்தா போட்டியிட்ட நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார். இருப்பினும், மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதால், இந்த வெற்றி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப் பதிவானது நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர். இதனால் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.