பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று (20.10.2024) காலையில் டெல்லியில் உள்ள பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மும்பை - சிங்கப்பூர், சிங்கப்பூர் - மும்பை, சிங்கப்பூர் - டெல்லி, சிங்கப்பூர் - புனே, பாலி - டெல்லி மற்றும் டெல்லி - பிராங்பேர்ட் உள்ளிட்ட விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அதன் பின்னர் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சோதனைகள் நடத்தப்படுவதற்காக மூன்று கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக விமான நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று (19.10.2024) 30க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக விமான பயணிகள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளன. கடந்த ஏழு நாட்களில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.