காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் குரேஷி 2014 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உருது அகாடமியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பா.ஜ.க கட்சியின் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, அஜீஸ் குரேஷி பேசியுள்ள ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தற்போது அது வைரலாகிவருகிறது.
பங்கஜ் சதுர்வேதி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் அஜீஸ் குரேஷி, “இந்த நாட்டில் 22 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு கோடி இஸ்லாமியர்கள் இறந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கு எந்தவித பயமும் இல்லை. இன்று நேருவின் வாரிசுகளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் தாங்கள் ஒரு இந்துக்கள் என்று பெருமையாக கூறி மத ஊர்வலம் நடத்துகின்றனர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிலைகளை நிறுவி மூழ்கடிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்கினாலும் பரவாயில்லை.
நாட்டில் உள்ள காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய சமூகம் தங்களின் அடிமைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் ஏன் உங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை. நீங்கள் அவர்களை ராணுவம், காவல்துறை, கடற்படை ஆகிய துறைகளில் அழைத்து செல்வதில்லை. பிறகு ஏன் இஸ்லாமியர்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அஜீஸ் குரேஷி பேசியிருந்தார்.