அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தெலங்கானாவின் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், முதல் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “மூன்று வெற்றிகரமான ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிறகு, மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத பா.ஜ.க.வை எதிர்த்து போராட முன்னேறி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா கூட்டணியின் வளர்ச்சியால் குழப்பமடைந்த பா.ஜ.க ஆட்சியானது, எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது.
மணிப்பூரில் இன்னும் சோகமான நிகழ்வுகள் வெளிவருவதை முழு தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூரின் நெருப்பு ஹரியானாவில் நூஹ்வை அடைய, மோடி அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால், முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க அரசு, வகுப்புவாத அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் என அனைவரும் எரிகிற நெருப்பில் எரிபொருள் சேர்க்கின்றனர்” என்று கூறினார்.