அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் இனியும் பொறுமை காக்க முடியாது. இன்னும் 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். அயோத்தியின் கலாச்சாரம் தொடர்பான பகுதிக்குள் எந்தவிதமான மசூதியும் இருக்கக் கூடாது என்ற இரண்டு விஷயங்களிலும் நாங்கள் திடமாக இருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பொறுமையாக இருந்துவிட்டோம்.
எனவே அடுத்த 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்குவோம். மேலும் 2-வது முறையாக பிரதமராக வந்திருக்கும் மோடிக்கு ராமர் கோயில் கட்டுவது குறித்து நினைவுபடுத்த விரும்புகிறோம். விஸ்வ இந்து பரிசத்தின் மார்க்தர்ஷக் சமிதியின் கூட்டம் ஹரித்துவாரில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்படும்" என தெரிவித்தார். அவரின் கருத்துப்படி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட திட்டமிடலாம் என தகவல் பரவுகிறது.