தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி
உத்தரபிரதேச மாநிலத்தில் பதாயு நகரில் கோவிலுக்குச் சென்ற 50 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவில் பூசாரி, அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி, சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், "அப்பெண் மாலையில் வெளியே செல்லாமல் இருந்திருந்தால் அல்லது குடும்பத்தின் ஏதாவதொரு குழந்தையுடன் சென்றிருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், அவரை தொலைபேசி மூலம் அழைத்து வெளியே வரச்செய்திருக்கிறார்கள் என்பதால் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிகிறது" என கூறியுள்ளார்.
பெண் வெளியில் செல்லாமல் இருந்திருந்தால், வன்கொடுமை நடந்திருக்காது என்ற ரீதியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரே பேசியிருப்பதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு பெண்கள் அமைப்பினர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "இந்த நடத்தை மூலம் பெண்களின் பாதுகாப்பை நம்மால் உறுதிப்படுத்த முடியுமா? பாலியல் பலாத்காரத்திற்கு பாதிக்கப்பட்டவரை மகளிர் ஆணைய உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்" என விமர்சித்துள்ளார்.