அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் தான் எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதியான வயநாட்டுக்கு சென்ற ராகுல்காந்தி, 'எனது எம்.பி பதவியை பறிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக நான் தொடர்வதை பாஜகவினால் பறிக்க முடியாது. வயநாடு மக்களுக்கு என்ன தேவை என்பதற்காக போராடுபவன்தான் மக்கள் பிரதிநிதி. நாடாளுமன்ற உறுப்பினர் என்பது பெயருக்கு பின் வரும் சாதாரணமான தகுதிதான். சுதந்திரமாக ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மக்கள் மற்றும் இந்திய மக்களின் நோக்கம். நான்கைந்து பேருக்கு மட்டுமே சொந்தமாக இருக்கக்கூடிய நாட்டில் யாரும் வாழ விரும்ப மாட்டார்கள்' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது.